மனிதன் பல போராட்டங்களை நடத்தி, பல சக மனிதர்களை அதில் இழந்து, மனிதன் என்னும் நாம் ஒரே இனம், நமக்குள் எந்த விதத்திலும் பிரிவினை ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது அதன் மூலம் அனைவரின் உரிமையும் நிலைநாட்டப்ப்ட வேண்டும் என்பதற்காக இன்றும் போராடி வருகிறோம் அல்லவா?
அதுபோலத்தான் இணையம் என்னும் தொழில்நுட்ப புரட்சியானது இராணுவ பயன்பாடு, பல்கலைக்கழகப் பயன்பாடுகளை தாண்டி, உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் தகவல் தங்கு தடையின்றி எவ்வித பாகுபாடும் (discrimination) இல்லாமல் கிடைக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இணைய உலகில், தகவல்கள் டேட்டா பாக்கெட்ஸ் (Data packets) என்னும் வடிவில் சிறு சிறு பெட்டிகளைப் போல் பயணிக்கும். கீழ்காணும் காணொலியில் இதனை கற்பனையின் மூலம் சித்தரிக்கிறார்கள்.
நெட் நியூட்ராலிட்டி (இணைய நடுநிலமை (or) இணைய சமத்துவம்) என்பது இவ்வாறு பயணிக்கும் அனைத்து பாக்கெட்டுகளையும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் யாரும் தங்களது கட்டமைப்பு (infrastructure) அதிகாரம் கொண்டு தடுத்து நிறுத்தவோ, அதன் வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ அல்லது நாடு, இடம் சார்ந்து ஒரு சில தகவல் பாக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்த இணைய இணைப்பு அல்லாத பிற கட்டணம் வசூலிப்பதோ அல்லது இணையம் இல்லாத போதும் சில பாக்கெட்டுகளை மட்டும் இலவசமாக வழங்க கூடாது என்பதாகும். மொத்தத்தில் இணையத்தில் பயணிக்கும் தகவல்களை அதன் வழியில் எவ்விதத்திலும் குறிக்கிடாமல் அது சென்றடைய விடவேண்டும்.
"கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம்" செய்து என்ன பயன் என்றொரு பழமொழி உண்டு, அதாவது தகுந்த நேரத்தில் செய்யாத எதுவும் வீண். இணையத்தில் யாவரும் சமம் அவரவர் இணைய இணைப்பு பொறுத்து, அனைத்து வலைதளங்களும் வேகமாக கிடைக்கும் பொழுது ஒரு சில தளங்கள் மட்டும் மிகவும் தாமதமாக அல்லது கிடைக்கவே பெறாமல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய தகவல்களை தடுத்து நிறுத்தி, நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றும் இணையத்தில் இயங்காது என்பது, இணையம் உருவாக்கப்பட்ட போது அதன் தலைச் சிறந்த கோட்பாடான "இணையத்தில் தகவலைப் பெற அனைவருக்கும் பாகுபாடின்றி உரிமை உண்டு" என்பதற்கு எதிரானதல்லவா?
ஒருவருக்கு கிடைக்க வேண்டிய தகவலை நடுவில் சில தொலைதொடர்ப்பு நிறுவனங்கள் கிடைக்க விடாமலோ அல்லது தாமதமாக கிடைக்கப் பெற செய்தாலோ அது நியாயமாகுமா? அதே போல் இணையத்தில் எண்ணற்ற கோடிக்கணக்காண தளங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஏதேனும் ஒருசில தளங்களை மட்டும் இலவசமாக பயன்படுத்தலாம், மீதி தளங்களை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று சில தளங்களுக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏன்? இதுவும் அந்த கோட்பாட்டிற்கு எதிரான செயல் தானே? சமத்துவம் என்பது இங்கே என்னவாயிற்று?
இதை நாம் கண்டுகொள்ளாவிட்டால், நாளை இச்செயல் பெருகும், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும், நாம் இணையத்தை பயன்படுத்தும் முறையை, எந்த தகவலை நாடுவது, எந்த தகவலை அடைய முடியாது என்பதை தீர்மானிப்பது தொலைதொடர்பு நிறுவனங்களிடம் சரணடையும் செயல். தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைய சேவையை கொடுப்பதற்குத் தானே தவிர, நாம் எந்த தளத்தை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் கூடாது என்பதல்ல.
0 comments:
Post a Comment